ADDED : மார் 24, 2025 05:08 AM

பெங்களூரு: ''அமைச்சர் ராஜண்ணாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்,'' என்று, ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா கோரிக்கை விடுத்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநில, தேசிய அரசியல் தலைவர்கள் 48 பேரின் வீடியோக்கள் அடங்கிய 'பென்டிரைவ்' இருப்பதாக, சட்டசபையில் அமைச்சர் ராஜண்ணா கூறி உள்ளார்.
இதுகுறித்து அரசு தீவிர விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ.,யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும். ராஜண்ணாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் அனைத்தும் வெளி வந்து விடும்.
ஹனிடிராப் விவகாரத்திற்கு, துணை முதல்வர் சிவகுமார் நேரடி காரணம். நானும், ரமேஷ் ஜார்கிஹோளியும் காங்கிரசில் இருந்தவர்கள். முதலில் ரமேஷை, ஹனிடிராப்பில் சிக்க வைத்து, அமைச்சர் பதவியை காலி செய்தார்.
ரேவண்ணா மீது பொய் பலாத்கார வழக்கு போட்டு சிறையில் தள்ளினர். தேவகவுடா வீட்டிற்கு சென்று ரேவண்ணாவை கைது செய்ததை, மாநில மக்கள் மறக்க மாட்டார்கள். சூரஜ் ரேவண்ணா, என் மீதும் பொய் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர்.
என் மீது பலாத்கார புகார் அளித்த பெண் பேசுவதை வைத்தே, அவர் எந்த மாதிரி ஆனவர் என்பதை தெரிந்து கொள்ளலாம். அவரை பற்றி நான் எதுவும் பேச மாட்டேன். எனது பலாத்கார வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்கும்படி, அரசுக்கு கோரிக்கை வைத்தேன். ஆனால் ஒப்படைக்க மறுக்கின்றனர். வழக்குகளை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தால், இந்த அரசு இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.