ADDED : மார் 08, 2024 11:47 PM

புதுடில்லி: ராஜ்யசபா நியமன எம்.பி.,யாக, 'இன்போசிஸ்' இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி, 73, நியமிக்கப்பட்டு உள்ளார்.
ராஜ்யசபாவின் மொத்த பலம், 245. இதில் மாநிலங்களில் இருந்து, 233 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், 12 பேர் ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கலை, இலக்கியம், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குவோர், ராஜ்யசபா நியமன எம்.பி.,யாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல எழுத்தாளரும், கல்வியாளருமான சுதா மூர்த்தியை, ராஜ்யசபா நியமன எம்.பி.,யாக நியமித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கர்நாடகாவின் ஷிகானில், 1950 ஆக., 19ல் பிறந்த சுதா மூர்த்தி, கணினி விஞ்ஞானி மற்றும் இன்ஜினியர் ஆவார்.
டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமோட்டிவ் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் இன்ஜினியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
பிரபல தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான, இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி, 2006ல் பத்மஸ்ரீ மற்றும் 2023ல் பத்ம பூஷண் விருதுகளை பெற்றுள்ளார்.
இவரது மருமகன் ரிஷி சுனக் தான், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக பதவி வகிக்கிறார்.
சுதா மூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது.
'ராஜ்யசபாவில் அவரது வரவு, நம் பெண் சக்திக்கு ஒரு சக்திவாய்ந்த சான்று. சுதா மூர்த்தியின் ராஜ்யசபா பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்' என, குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் தினத்தில் எனக்கு இந்த பதவி கிடைத்தது, இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி!
-சுதா மூர்த்தி

