ADDED : ஜன 20, 2024 01:28 AM
'அயோத்தியில் நாளை மறுநாள் நடக்க உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில், சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பில், அதன் தலைமை நிர்வாக அதிகாரி கவுரிசங்கர் பங்கேற்பார்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிருங்கேரி மடம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிருங்கேரி சாரதா பீடம் தொடர்பான தகவல்களை, மடத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூகவலைதள பக்கத்தின் வாயிலாக மட்டுமே அறிய வேண்டும் என, கடந்த 8ம் தேதி அறிவுறுத்தி இருந்தோம்.
அப்படி இருக்கையில், சிருங்கேரி மடத்தின் பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உள்ளதாக, 'ரிபப்ளிக் வேர்ல்டு' என்ற ஊடகத்தில் தவறான செய்தி வெளியாகி உள்ளது.
இது போன்ற தவறுகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இந்நிலையில், சிருங்கேரி மடத்தின் பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் வழிகாட்டுதலின்படி, அயோத்தியில் நாளை மறுநாள் நடக்கவுள்ள கும்பாபிஷேகத்தில், சாரதா பீடத்தின் தலைமை செயல் அதிகாரி கவுரிசங்கர் பங்கேற்க உள்ளார்.
அனைத்து பக்தர்களும் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை சமயத்தில், ராம தாரக மந்திரத்தையும், ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய ராம புஜங்க ஸ்தோத்திரத்தையும் ஜபித்து, பகவான் ஸ்ரீ ராமச்சந்திரரின் அருளைப் பெறுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.