நடிகை மம்தா குல்கர்னி துறவறம்; பாபா ராம்தேவ் அதிருப்தி!
நடிகை மம்தா குல்கர்னி துறவறம்; பாபா ராம்தேவ் அதிருப்தி!
UPDATED : ஜன 28, 2025 07:29 PM
ADDED : ஜன 28, 2025 07:26 PM

புதுடில்லி: பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் ஏற்றது குறித்து கருத்து தெரிவித்த யோகா குரு ராம்தேவ், தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மம்தா குல்கர்னி, 50. இவர், தமிழில் ஷோபா சந்திரசேகரன் இயக்கிய 'நண்பர்கள்' என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். ஹிந்திப் படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்த அவர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளும் இருந்தன.
போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க வெளிநாட்டில் இருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பினார். சில தினங்களுக்கு முன், இவர் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு துறவறம் ஏற்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.அது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட அகாராவின் மகா மண்டலேஸ்வர் பதவியும் வழங்கப்பட்டது. இது பற்றி யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது:
'இதுநாள் வரை உலக இன்பங்களை எல்லாம் அனுபவித்தவர்கள், திடீரென ஒரே நாளில் துறவிகளாக மாறி விட்டார்கள். மகா மண்டலேஸ்வர் பட்டமும் பெற்று விட்டார்கள். ''துறவி ஆவதற்கு, பல ஆண்டுகள் ஆன்மிகம் குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே நாளில் யாரும் புனிதராக முடியாது.
ஜனநாயகத்தின் மாபெரும் கொண்டாட்டம் தான் கும்பமேளா. இது ஒரு புனிதமான பண்டிகையாகும். சிலர், அநாகரிகம், போதை மற்றும் தகாத நடத்தையுடன் தொடர்பு படுத்துகிறார்கள். இது நிகழ்ச்சியின் உண்மையான சாராம்சம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.