14 ஆண்டு சபதம் நிறைவு செய்த ராம்பால் காஷ்யப் பிரதமருடன் சந்திப்பு
14 ஆண்டு சபதம் நிறைவு செய்த ராம்பால் காஷ்யப் பிரதமருடன் சந்திப்பு
ADDED : ஏப் 14, 2025 07:15 PM

புதுடில்லி: காலணி இல்லாமல் 14 ஆண்டுகள் காத்திருந்த விசுவாசி, பிரதமர் மோடியை சந்தித்து சபதத்தை நிறைவு செய்தார்.
ஹரியானா மாநிலம் கைதலை சேர்ந்தவர் ராம்பால் காஷ்யப். இவர் 14 ஆண்டுகளுக்கு முன், ஒரு சபதம் செய்தார். அது என்னவென்றால், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் ஆக வேண்டும் என்றும் அதுவரை தான் காலணி அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்து, தான் அணிந்திருந்த காலணியை கழற்றிவிட்டார். அன்று முதல் இன்று வரை அவர் காலணி அணியவே இல்லை.
இந்நிலையில் இன்று யமுனா நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டம் முடிந்த பிறகு, 14 ஆண்டுகளாக காலணி அணியாமல் இருந்த ராம்பால் காஷ்யப், முதல் முறையாக காலணி அணிந்தார். அதை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
யமுனா நகரில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கைத்தலைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப்பை சந்தித்தேன்.
அவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சபதம் எடுத்திருந்தார், நான் பிரதமரான பிறகுதான் அவர் காலணிகளை அணிவேன் என்று சபதம் செய்திருந்தார். சபதம் நிறைவேறி என்னை நேரில் சந்தித்த பிறகு காலணி அணிவதாக சபதம் செய்திருந்தார்.
ராம்பால் போன்றவர்களால் நான் பணிவுடன் இருக்கிறேன், அவர்களின் பாசத்தையும் ஏற்றுக்கொள்கிறேன், இதுபோன்ற பக்தி மற்றும் உறுதியை பாராட்டிய அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது.
அத்தகைய சபதங்களை எடுக்கும் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பை நான் மதிக்கிறேன். தயவுசெய்து சமூகப் பணி மற்றும் தேசக் கட்டுமானத்துடன் தொடர்புடைய ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.