ADDED : மே 16, 2024 05:14 AM

கர்நாடகாவில் நான்கு கொம்புகள் கொண்ட அரிய வகை மான்கள் நிறைந்த விலங்களுக்காக அமைந்துள்ள ஒரே சரணாலயம் ரங்காயனதுர்கா சரணாலயமாகும்.
தாவணகெரே என்றால், அனைவருக்கும் 'வெண்ணெய் தோசை' தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், இங்கு ஒரு இன மான்களை பாதுகாக்க, அரசு தனி சரணாலயமே கட்டி உள்ளது யாருக்காவது தெரியுமா.
ஆம்... மாவட்டத்தின் ஜகலுாரில் அமைந்துள்ளது ரங்கயனதுர்கா நான்கு கொம்புகள் கொண்ட சரணாலயம். இது, 77.24 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டதாகும். கடந்த 2011 ஜனவரியில் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் 30 கிராமங்கள் உள்ளன.
வழக்கமாக கொம்பு இல்லாத, இரண்டு கொம்புகள் கொண்ட மான்களை மட்டுமே அதிகளவில் பார்த்திருப்போம். ஆனால், இங்கு நான்கு கொம்புகள் கொண்ட மான்கள் அதிகளவில் உள்ளன.
அத்துடன், இ.எஸ்.இசட்., எனப்படும் 'சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக' அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இன மான்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மான்களுடன் சோம்பல் கரடி, காட்டு பூனை, முள்ளம்பன்றி, கழுதைப்புலி போன்ற பாலுாட்டி விலங்குகளும் உள்ளன. ராஜநாகம், கண்ணாடி விரியன் பாம்புகளும் நடமாடுகின்றன.
எப்படி செல்வது?
ஜகலுாருக்கு சென்றால், அங்கிருந்து 10 கி.மீ., தொலைவில் அரபாவி - செல்லகெரே சாலையில் இந்த சரணாலயம் அமைந்து உள்ளது. பெங்களூரில் இருந்து ரயிலில் தாவணகெரே, ஜகலுாருக்கு செல்லலாம். அங்கிருந்து டாக்சி, ஆட்டோவில் சரணாலயம் செல்லலாம்.
***
- நமது நிருபர் -