பாலியல் பலாத்காரம் செய்து கொலை: உ.பி.,யில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்
பாலியல் பலாத்காரம் செய்து கொலை: உ.பி.,யில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்
ADDED : ஜன 04, 2026 02:23 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தில், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 6 வயது சிறுமி மொட்டை மாடியில் இருந்து துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். குற்றவாளிகள் தப்பியோடியபோது, போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
உ.பி.,யில் புலந்தசாஹர் மாவட்டத்தின் சிக்கந்தராபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம், 6 வயது சிறுமி ஒருவர் மொட்டை மாடியில் இருந்து விழுந்ததாக கூறப்பட்டது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமியின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் அளித்த புகாரில், தன் மகள் வழக்கம் போல் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த நிலையில், அக்குடியிருப்பின் பின்புறம் உள்ள நிலத்தில் துாக்கி வீசப்பட்டு இறந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், குடியிருப்பில் வாடகைக்கு வசிக்கும் ராஜு, வீறு காஷ்யப் ஆகியோர் தன் மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே கட்டுமான பணி நடக்கும் கட்டடத்திற்குள் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
அவர்களை பிடிக்க சென்றபோது தப்பிக்க முயன்றதால், இருவரையும் கால்களில் சுட்டு போலீசார் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மாடியில் இருந்து துாக்கி வீசியதை ஒப்புக்கொண்டனர்.

