மாணவி உயிரை பறித்த 'ராகிங்' ஹிமாச்சல் அரசு, யு.ஜி.சி., தனித்தனி விசாரணைக்கு உத்தரவு
மாணவி உயிரை பறித்த 'ராகிங்' ஹிமாச்சல் அரசு, யு.ஜி.சி., தனித்தனி விசாரணைக்கு உத்தரவு
ADDED : ஜன 04, 2026 02:23 AM
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில், அரசு கல்லுாரியில் படித்த 19 வயது தலித் மாணவி, 'ராகிங்' கொடுமையால் உயிரிழந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அது குறித்து விசாரிக்க மாநில அரசு மற்றும் யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு சார்பில் தனித்தனியாக விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
ஹிமாச்சலில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்க்ரா மாவட்டத்தின் தரம்சாலாவில் உள்ள அரசு கல்லுாரி ஒன்றில் படித்த 19 வயது தலித் மாணவியை, சீனியர் மாணவியர் மூன்று பேர் கடந்த செப்டம்பரில் ராகிங் செய்தனர்.
வன்கொடுமை மேலும், பேராசிரியர் அசோக்குமார் என்பவரும் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதனால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பஞ்சாபின் லுாதியானாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து, ராகிங் செய்த மாணவியர் மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் அசோக்குமார் மீது, உயிரிழந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் ஹிமாச்சல் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கமிட்டி இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, உயர் கல்வி கூடுதல் இயக்குநர் ஹரீஷ் குமார் தலைமையில், நான்கு பேர் அடங்கிய விசாரணை கமிட்டியை அமைத்து ஹிமாச்சல் அரசு உத்தரவிட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல், ராகிங், ஜாதி என, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கையை இந்த கமிட்டி சமர்ப்பிக்கும்.
இதற்கிடையே, இச்சம்பவத்தில் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்த யு.ஜி.சி., ஐந்து பேர் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

