'ரசகுல்லா' ராகுல், 'ஜிலேபி' ஜுரெல், லட்டு 'ஜட்டு' மூவரும் தித்திக்கும் தீபாவளி சதம்; இந்திய அணி வலுவான முன்னிலை
'ரசகுல்லா' ராகுல், 'ஜிலேபி' ஜுரெல், லட்டு 'ஜட்டு' மூவரும் தித்திக்கும் தீபாவளி சதம்; இந்திய அணி வலுவான முன்னிலை
ADDED : அக் 04, 2025 05:11 AM

ஆமதாபாத் : முதல் டெஸ்டில் ராகுல், ஜுரெல், ஜடேஜா சதம் விளாச, இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது.
ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் முதல் டெஸ்ட் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் பின்தங்கியிருந்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஒருபக்கம் அனுபவமில்லா வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் கைவலிக்க பந்துவீசுவதும் மறுபக்கம் நல்ல 'பார்மில்' உள்ள இந்திய பேட்டர்கள் அடிச்சு நொறுக்குவதும் தொடர்ந்தது.
மூன்றாவது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில், 98 ரன் சேர்த்தனர். டெஸ்ட் அரங்கில் 8வது அரைசதம் எட்டிய கேப்டன் சுப்மன் கில் (50), சேஸ் பந்தில் அவுட்டானார். 'ரசகுல்லா' போல இனித்த ராகுல், டெஸ்டில் 11வது சதம் அடித்தார். சதத்தை தனது செல்ல மகளுக்கு அர்ப்பணிக்கும்விதமாக வாயில் விரல் வைத்து வித்தியாசமாக கொண்டாடினார். ராகுல் 100 ரன்னுக்கு அவுட்டானார்.
206 ரன் குவிப்பு பின் ரவிந்திர ஜடேஜா, கீப்பர் துருவ் ஜுரெல் சேர்ந்து ரன் மழை பொழிய, இந்திய ரசிகர்கள் முன்னதாகவே தீபாவளியை கொண்டாடினர். 5வது விக்கெட்டுக்கு 206 ரன் சேர்த்தனர். சேஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜுரெல், 'ஜிலேபி' போல முதல் டெஸ்ட் சதத்தை சுவைத்தார். பியர்ரி பந்தில் ஜுரெல் (125, 15X4, 3X6) அவுட்டானார். சிறிது நேரத்தில் டெஸ்டில் 'லட்டு' போல 6வது சதம் அடித்த ஜடேஜா (செல்லமாக ஜட்டு), தனது வழக்கமான 'ஸ்டைலில்' பேட்டை வாள் போல சுழற்றி மகிழ்ந்தார். இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 448/5 ரன் எடுத்து, 286 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஜடேஜா (104), வாஷிங்டன் சுந்தர் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று இந்திய பேட்டர்கள் விரைவாக ரன் சேர்த்தால், இன்னிங்ஸ் வெற்றி பெறலாம்.