எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஆர்.சி.பி., ரசிகர்கள் கர்நாடக வீரர் ராகுலுக்கு எகிறியது 'மவுசு'
எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஆர்.சி.பி., ரசிகர்கள் கர்நாடக வீரர் ராகுலுக்கு எகிறியது 'மவுசு'
ADDED : நவ 22, 2024 07:24 AM

ஐ.பி.எல்., மெகா ஏலம், வரும் டிசம்பரில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க, பல முன்னணி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அனைத்து அணிகளின் கவனமும், கன்னட வீரரான கே.எல்.ராகுல் மீது திரும்பி உள்ளது. எந்த அணிக்கு ராகுல் செல்வார் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர், விக்கெட் கீப்பர், தொடக்க ஆட்டக்காரர், கிளாஸிக் ராகுல், பீல்டிங்கில் புலி என பல்வேறு அடைமொழிக்கு சொந்தக்காரர் ராகுல். ஆடுகளத்தில் பவுலர்களிடம் வாயால் பேசாமல், பேட்டால் பேசுவது தான், இவர் வழக்கம்.
தாய், தந்தை
கர்நாடகா, பெங்களூரில் லோகேஷ் - ராஜேஸ்வரி தம்பதிக்கு 1992, ஏப்ரல் 18ல் ராகுல் பிறந்தார்.
இவரது தந்தை, கர்நாடக தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பொறுப்பு இயக்குனராகவும்; தாய் மங்களூரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்கள்.
சிறுவயதிலிருந்தே ராகுலுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். அதற்கு காரணம், அவரது தந்தையும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். ஆரம்ப காலத்திலே உள்ளூர் போட்டிகளில் தன் அதிரடி ஆட்டத்தால் கவனம் பெற்றார். 2010ல் 19 வயதிற்கு உட்பட்ட 'உலக கோப்பை போட்டி'யில் இந்திய அணியில் கால் தடம் பதித்தார்.
முதல் வாய்ப்பு
ஐ.பி.எல்., போட்டியில் 2013ல், தன் சொந்த மண்ணின் அணியான, ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் களம் இறங்கினார். ஆரம்ப காலத்தில் தன் திறமையை வெளிபடுத்த சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும், தொடர் பயிற்சிகளால் 2014, 2015ம் ஆண்டுகளில் ஹைதராபாத் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இரண்டு சீசன்களில் 300 ரன்கள் அடித்து, தன் பேட்டிங் திறமையை இந்தியா முழுதும் அறியும்படி செய்தார்.
அவரது திறமையை பார்த்த ஆர்.சி.பி., நிர்வாகம், அவரை மீண்டும் 2016ம் ஆண்டு அணியில் சேர்த்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அதிரடி ஆட்டத்தினால் 397 ரன்கள் குவித்து, 'மாஸ்' காட்டினார். தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் 2017 ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க முடியவில்லை. காயம் அடைந்த சிங்கத்தின் கர்ஜனையை வெளிப்படுத்தும் விதமாக 2018ல், பஞ்சாப் அணியில் இடம் பிடித்தார். 11 கோடி ரூபாய்க்கு, ராகுலை வாங்கியது பஞ்சாப் அணி.
இவ்வளவு பெரிய தொகைக்கு, அவர் பொருத்தமான ஆள் இல்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இவ்விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2018 முதல் 2021 வரை நடந்த போட்டிகளில், 23 அரை சதம், 2 சதம் அடித்தார். அதிக ரன்கள் குவித்த விருது; மொத்தம் 2,548 ரன்கள் அடித்து, இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.
லக்னோ அணிக்கு 2022 முதல் 2024 வரை கேப்டனாக இருந்து நன்றாக வழி நடத்தினார். 2022, 2023 சீசன்களில் லக்னோ அணி 3 ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக, 77 ஒரு நாள் போட்டிகளில் 7 சதம், 18 அரை சதம், மொத்தம் 2,851 ரன்கள்; 72டி 20 போட்டிகளில் 2 சதம், 22 அரை சதம், மொத்தம் 2,265 ரன்கள்; 53 டெஸ்ட் போட்டிகளில் 8 சதம், 15 அரை சதம், 2,981 ரன்கள் குவித்து சாதனை படைத்து உள்ளார்.
'பிளிப் ஷாட், கவர் டிரைவ், புல் ஷாட்' போன்ற கஷ்டமான ஷாட்களை, கிளாசிக்காக அடிப்பது இவரது ஸ்டைல்.
கிரிக்கெட்டின் மூன்று பார்மெட்டுகளிலும், மிக விரைவாக சதம் அடித்த இந்திய வீரர்களில் ஒருவராக உள்ளார். விக்கெட் கீப்பராக இருந்தாலும், பீல்டிங்கில் புலி போல செயல்படுவார். ராகுல் களத்தில் நின்றாலே, எதிர் அணியின் பவுலர்களுக்கு பயம் தான்.
தக்க வைப்பு
உலக கோப்பை - 2022, 'டி 20' தொடருக்கு பின், அவருக்கு இந்திய அணியில், 'டி- 20' போட்டிகளில் விளையாட இடம் கிடைக்கவில்லை. ஆனாலும், ஒரு நாள் போட்டிகளில் அபார பேட்டிங்கால் தன் இடத்தை இந்திய அணியில் தக்க வைத்து உள்ளார்.
இந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில், ராகுல் மீண்டும் ஆர்.சி.பி.,க்கு திரும்புவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். எத்தனை கோடி கொடுத்தாவது ராகுலை வாங்க அனைத்து அணிகளும் முயற்சி செய்ய காத்திருக்கின்றன. இருப்பினும், ராகுல் எந்த அணிக்கு செல்வார் என்பதை பொறுத்தே, ஆடுகளம் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை - நமது நிருபர் -.