கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி; பெங்களூரு கிரிக்கெட் அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி; பெங்களூரு கிரிக்கெட் அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
UPDATED : ஜூன் 06, 2025 05:22 PM
ADDED : ஜூன் 06, 2025 09:51 AM

பெங்களூரு: பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில் பெங்களூரு கிரிக்கெட் அணி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்.சி.பி., எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். கூட்ட நெரிசலில் சிக்கி, ஐந்து பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இது குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. 'பெங்களூரு அணியின் வெற்றியை கொண்டாட, ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்று தெரியாதா? ஒரே நேரத்தில் விதான் சவுதா, சின்னசாமி மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் நிகழ்ச்சி நடத்தியது ஏன்?
மாநில அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?' என, நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததை, இயற்கைக்கு மாறான மரணம் என்று, கப்பன் பார்க் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கப்பன் பார்க் இன்ஸ்பெக்டர் கிரிஷ் அளித்த புகாரின்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம், டி.என்.ஏ., என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாக கமிட்டி மீது, போலீசார் நேற்று மாலை வழக்குப்பதிவு செய்தனர்.பெங்களூரு கிரிக்கெட் அணியின் நிர்வாகி நிகில் சோஸ்லே, டி.என்.ஏவின் சுனில் மேத்யூ உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.