ADDED : பிப் 13, 2024 06:59 AM

ராம்நகர்: ''என்னை சிறைக்கு அனுப்புவதாக, பலர் கூறுகின்றனர். நான் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன். எதற்கும் பயப்பட மாட்டேன்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
ராம்நகரில் நேற்று அவர் கூறியதாவது:
'சிவகுமார் திஹார் சிறைக்கு செல்லும் காலம் நெருங்குகிறது' என, பா.ஜ.,வின் முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.
இவர் மட்டுமின்றி, என்னை சிறைக்கு அனுப்புவதாக, எத்தனையோ பேர் கூறினர். அனைத்துக்கும் நான் தயாராகவே இருக்கிறேன். பயப்பட மாட்டேன்.
எங்கள் மாவட்டத்தினர் மட்டுமின்றி, மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் என்னை குறி வைத்து விமர்சிக்கின்றனர். எனக்கு எதிராக பல சதிகள் நடந்துள்ளன. நான் எதுவும் கூறவில்லை. சி.பி.ஐ., மூலமாக என்ன செய்தனர் என்பது உட்பட பல விஷயங்களை காலம் வரும் போது, விரிவாக கூறுவேன்.
யோகேஸ்வர், குமாரசாமி சந்தித்து பேசட்டும். அவர்கள் எதையோ செய்து கொள்ளட்டும். அது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகும். அரசியல் செய்வோரை வேண்டாம் என கூற முடியுமா.
இதற்கு முன் சிந்தியாவை களமிறக்கினர். அதன்பின் அனிதா குமாரசாமியை நிறுத்திய போது, பா.ஜ., வேட்பாளரை களமிறக்கவில்லை.
சுரேஷ் என் தம்பி என்பதற்காக, நான் கூறவில்லை. ஆனால் மாநிலத்தின் 28 தொகுதியிலும், அவரை போன்று வேறு எந்த எம்.பி.,யும் பணியாற்றியது இல்லை. அனைத்து பணிகளுக்கும் ஆவணங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.