ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடத்தல் மனைவியின் சாதுர்யத்தால் 4 பேர் கைது
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடத்தல் மனைவியின் சாதுர்யத்தால் 4 பேர் கைது
ADDED : பிப் 21, 2025 05:26 AM

பெலகாவி: பெலகாவியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெலகாவி மாவட்டம், முதல்கியின் ராஜாபுரா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் அம்பி, 48. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், பிப்., 14ல் மஹாராஷ்டிராவில் இருந்து காரில் பெலகாவிக்கு வந்து கொண்டிருந்தார். தண்டாபுரா கிராஸ் அருகே வரும் போது, காரை மர்ம நபர்கள் வழிமறித்தனர். காரை நிறுத்தியதும், அதில் ஏறி, காருடன் அவரை கடத்தினர்.
ரூ.10 லட்சம்
மறுநாள் காலையில், பசவராஜ் மூலம் அவரது மனைவி ேஷாபாவுக்கு போன் செய்ய வைத்தனர். தன்னை கடத்தியதாகவும், 10 லட்சம் ரூபாய் கொண்டு வர வேண்டும் என கூற வைத்தனர்.
கடத்தல்காரர்கள் கூறிய இடத்துக்கு, பணத்தை, பசவராஜின் மனைவி கொண்டு வந்தார். உடன் அவரது மகனும், நண்பர்களும் வந்திருந்தனர்.
சந்தேகம்
மறைவான இடத்தில் நின்றிருந்த கடத்தல்காரர்கள், பசவராஜ் மனைவிக்கு போன் செய்து, 'தனியாக வர சொன்னால், கூட்டமாக வந்திருக்கிறாயா. உன் கணவரை கொல்வோம். இல்லையெனில் 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என்று மிரட்டினர்.
அச்சமடைந்த அவரது மனைவி, பணத்தை தந்துவிடுவதாக கூறினார். மறுபடியும், பிப்., 17ல், கடத்தல்காரர்கள் கூறிய இடத்துக்கு அவர் மட்டும் சென்று உள்ளார். அங்கு பசவராஜ் கார் மட்டுமே இருந்தது. வேறு யாரும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த ேஷாபா அங்கிருந்து சென்று, கட்டபிரபா போலீசில் புகார் செய்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், மூன்று தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இது தொடர்பாக, நேற்று எஸ்.பி., பீமா சங்கர் குலேத் அளித்த பேட்டி:
தொழிலதிபரை கடத்திய ஈஸ்வர் ரம்கனட்டி, சச்சின் காம்ப்ளே, ரமேஷ் காம்ப்ளே, ராகவேந்திரா மராபூர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்.
கடத்தப்பட்ட தொழிலதிபர், பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த கடத்தல்காரர்கள், அவரை கடத்தி பணம் பறித்தால், போலீசுக்கு செல்லமாட்டார்கள் என்று நினைத்தனர். அதனாலேயே 5 கோடி ரூபாய் கேட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.