வெள்ளத்தில் தத்தளிக்கும் வடமாநிலங்கள் மூன்று மாநிலங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
வெள்ளத்தில் தத்தளிக்கும் வடமாநிலங்கள் மூன்று மாநிலங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
ADDED : செப் 04, 2025 03:07 AM

புதுடில்லி: தொடரும் கனமழையால் வடமாநிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் ஆகியவற்றிற்கு அதிகனமழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில வாரங்களாக உத்தராகண்ட், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது.
மேக வெடிப்பு காரணமாக திடீரென கொட்டித்தீர்க்கும் மழையால், முக்கிய சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளன. ஜம்மு - காஷ்மீரில் கடந்த 14ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மிதக்கும் ஜம்மு அனந்த்நாக் மாவட்டத்தில், மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, பாலத்தின் அடியில் தங்கியிருந்த 25 குடும்பங்களை நேற்று உள்ளூர் போலீசார் மீட்டனர்.
ரஜோரி மாவட்டம் சுந்தர்பானில் உள்ள காங்க்ரி கிராமத்தில் மழையால் நேற்று வீடு இடிந்து விழுந்ததில், அதிலிருந்த தாய், மகள் உயிரிழந்தனர். தொடர் கனமழையால், முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அக்னுாரில் உள்ள கர்கல் கிராமத்தில் தண்ணீர் புகுந்தது.
அங்கு சிக்கியுள்ள 40க்கும் மேற்பட்டோரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, பகவதி நகர் அருகே உள்ள தாவி பாலம் முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்டது.
சத்தீஸ்கரில், தனேஷ்பூர் கிராமத்தில் சிறிய அணை உடைந்ததில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நான்கு பேர் பலியாகினர் தவிக்கும் பஞ்சாப் கடந்த 1988க்கு பின், கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாபில், கனமழைக்கு இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுதும் உள்ள 23 மாவட்டங்களும் தண்ணீரில் மிதக்கின்றன.
கல்வி நிறுவனங்களுக்கு 7ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீரில் பெய்யும் கனமழையால் பியாஸ், சட்லஜ், ரவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவே, பஞ்சாப் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
அமிர்தசரசின் அஜ்னாலா கிராமத்தில் இதயநோயால் படுத்த படுக்கையாக இருந்த பெண்ணை மீட்ட ராணுவத்தினர், 1,000 அடி தூரம் தோள்களில் சுமந்து சென்று, பின் படகில் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.
மாநிலம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ள 3.50 லட்சம் பேரை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இருவர் பலி ஹரியானாவிலும், கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. அம்பாலாவில் குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், மருத்தவமனைகள், வணிக வளாகங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக அமிர்தசரஸ் - அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குருக்ஷேத்ரா பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் இருவர் பலியாகினர்.
ஹிமாச்சலில் சோகம்
ஹிமாச்சல பிரதேசத்தில் 15 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டி வருகிறது. மண்டி மாவட்டத்தில் ஜங்கங்பாக் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஏழு பேர் பலியாகினர்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் மாநிலம் முழுதும் 1,155 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு தினங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிஷா, ராஜஸ்தான், உத்தர பிரதேசத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.