ADDED : ஜூன் 27, 2025 02:54 AM

மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் நேற்று கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் ' ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் காலை முதல் பலத்த மழை பெய்தது.
அடிமாலி, குமுளி தேசிய நெடுஞ்சாலை, அடிமாலி அருகே குறத்திகுடி, மாங்குளம் ரோடு, வெள்ளத்தூவல், கல்லார்குட்டி ரோடு செருதோணி அணைக்கட்டு அருகில் ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. இடுக்கி அணை அருகே மரம் ரோட்டில் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கட்டப்பனை அருகே குத்தளம்பாறை பகுதியில் சனோஜ் என்பவரது வீட்டின் பாதுகாப்பு சுவர் இடிந்து அருகில் வசிக்கும் சிபியின் வீடு சேதமடைந்தது.
தொடுபுழா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் கரையோரம் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கல்லார்குட்டி, பாம்ளா அணைகளில் அனைத்து மதகுகளும் நேற்று மதியம் திறக்கப்பட்டன.
வாகமண் வந்த மலப்புரத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நான்கு பேர் ஏலப்பாறை அருகில் உள்ள கல்லாற்றுபாறை நீர்வீழ்ச்சியை காண ஜீப்பில் வந்தனர். அவர்கள் சாகச பயணம் செல்வதாக கூறி கல்லாற்று பாறை ஆற்றை ஜீப்பில் கடக்க முயன்றனர். வெள்ளத்தில் சிக்கிய அவர்களை உள்ளூர் மக்கள் சிலர் சுற்றுலா பயணிகளை எச்சரித்து காப்பாற்றியதுடன் ஜீப்பையும் கயிறு கட்டி மீட்டனர்.
கன மழை முன்னெச்சரிக்கையால் படகு சவாரி உட்பட நீர்நிலை சுற்றுலா, சாகச பயணம் ஆகியவை நேற்று செயல்படவில்லை. கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு வழியாக இரவு நேர பயணத்திற்கு தடை உத்தரவு நீடிக்கிறது.
கல்வி நிறுவனங்களுக்கு இன்று(ஜூன்27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

