27 ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சி; முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு
27 ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சி; முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு
UPDATED : பிப் 20, 2025 09:39 PM
ADDED : பிப் 20, 2025 12:34 PM

புதுடில்லி: டில்லியின் முதல்வராக, பா.ஜ.,வின் முதல் முறை எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா பதவியேற்று கொண்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசிய தலைநகர் டில்லி சட்டசபைக்கு கடந்த, பிப்.,5ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள, 70 இடங்களில், 48 இடங்களில் வென்று பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. இதன் வாயிலாக, 27 ஆண்டுக்குப் பின், டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், டில்லி ராம் லீலா மைதானத்தில் இன்று (பிப்.,20) பதவியேற்பு விழா நடந்தது. டில்லியின் முதல்வராக, பா.ஜ.,வின் முதல் முறை எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா பதவியேற்று கொண்டார். இவருக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் டில்லியின் 4வது பெண் முதல்வர் ஆனார்.
ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்றனர்.
வழிபாடு
முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ரேகா குப்தா, தலைமைச் செயலகம் சென்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பிறகு யமுனை நதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து டில்லி அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்துவது எனவும், தலைமை தணிக்கை கணக்காளர் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இலாகா ஒதுக்கீடு
முதல்வர் ரேகா குப்தா - நிதித்துறை, வருவாய், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை
ஆஷிஷ் சூட் - உள்துறை, எரிசக்தி, கல்வி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை
பர்வேஷ் வர்மா - பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு துறை
பங்கஜ் குமார் சிங்- குடும்பம் மற்றும் சுகாதாரத்துறை
ரவிந்தர் சிங் - சமூக நீதி, தாழ்த்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை
கபில் மிஸ்ரா- சட்டம் மற்றும் நீதி, தொழிலாளர் நலத்துறை
மன்ஜிந்தர் சிங் சிர்சா - வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, உணவு மற்றும் விநியோகத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த ரேகா குப்தா?
* ஹரியானாவில் பணியா சமூகத்தைச் சேர்ந்தவர் ரேகா குப்தா. இவருக்கு வயது 50. தற்போது டில்லி பா.ஜ.,வின் பொதுச் செயலராக உள்ளார்.
* பா.ஜ.,வின் மகளிர் பிரிவு தேசிய துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். தற்போது நடந்த சட்டசபை தேர்தலில், ஷாலிமார் பாக் தொகுதியில் இருந்து, 29,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.
* சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு, வென்று, முதல்வராக உள்ளார். வழக்கறிஞரான இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவான, ஏ.பி.வி.பி.,யில் தன் அரசியல் பயணத்தை துவக்கினார்.
* கடந்த, 1997 - 1997ல் டில்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவரானார். உத்தரி பீதம்புராவில் இருந்து, கவுன்சிலராக, 2007 மற்றும் 2012ல் தேர்வானார். தெற்கு டில்லி மாநகராட்சி மேயராகவும் இருந்துள்ளார்.

