யமுனை நதியில் வெள்ள நிலைமை இப்போதைக்கு இல்லை என நிம்மதி
யமுனை நதியில் வெள்ள நிலைமை இப்போதைக்கு இல்லை என நிம்மதி
ADDED : ஜூலை 24, 2025 10:06 PM
புதுடில்லி:டில்லியின், ஓல்ட் அயர்ன் பிரிட்ஜ் பகுதியில், யமுனை நதியின் வெள்ள அபாய எச்சரிக்கை அளவு நேற்று, 0.37 மீட்டர் குறைவாகவே இருந்தது.
டில்லி நகரில் பாயும் யமுனை நதியில், பல இடங்களில் வெள்ள அபாய அளவு கணக்கிடப்படுகிறது. அவற்றில், ஓல்ட் அயர்ன் பிரிட்ஜ் பகுதியில் பதிவாகும் அளவு தான் முக்கியமாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் காலையில், வெள்ள அபாய எச்சரிக்கை அளவான 204.50 மீட்டருக்கு 1.21 மீட்டர் குறைவாக இருந்தது.
இந்நிலையில், நேற்று அந்த பகுதியில், 204.13 மீட்டர் என்ற அளவிலேயே நீர் மட்டம் இருந்தது.
யமுனை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கிற்கு காரணம், ஹரியானா மாநிலம் தான். அந்த மாநிலத்தின் ஹத்னிகுண்ட் நீர் தேக்கத்திலிருந்து யமுனை நதியில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு, வினாடிக்கு 50,000 கன அடியை தாண்டியுள்ளது. அதனால், ஓல்டு அயர்ன் பிரிட்ஜ் பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு, ஜூலை மாதம் இந்த நீர்தேக்கத்திலிருந்து, வினாடிக்கு 3.59 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால், டில்லியின் ஓல்டு அயர்ன் பிரிட்ஜ் பகுதியில், 208.66 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் சென்றது.
இதனால், டில்லியின் மயூர் விஹார், ஐ.டி.ஓ., சலீம்கார் பைபாஸ் மற்றும் சிவில் லைன்ஸ் ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாகின. பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. உயிர் பலியும் ஏற்பட்டது.
அதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க, ஹத்ரிகுண்ட் நீர் தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை, மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எப்போது, அந்த நீர்தேக்கத்திலிருந்து ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறதோ, உடனடியாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது .
அந்த நிலையை தொட இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதால், யமுனை கரையோர மக்கள் கவலையின்றி உள்ளனர்.

