'மசாலா' பத்திர வழக்கில் கேரள முதல்வருக்கு நிவாரணம்
'மசாலா' பத்திர வழக்கில் கேரள முதல்வருக்கு நிவாரணம்
ADDED : டிச 19, 2025 12:24 AM

கொச்சி: உள்கட்டமைப்பு மேம்படுத்துதலில், 467 கோடி ரூபாய் முறைகேடு நடந்த வழக்கில், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கேரளாவில், கடந்த 2018ல் பெருவெள்ளம் ஏற்பட்டபோது அழிந்த உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்ப, கே.ஐ.ஐ.எப்.பி., எனப்படும் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு வாரியம் அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக, வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்ட, 'மசாலா' பத்திரங்கள் வெளியிடப்பட்டன.
முறைகேடு
வெளிநாட்டில் இருந்து நிதி திரட்ட இந்தியாவில் இருந்து வெளியிடப்படும் பத்திரங்கள், 'மசாலா' பத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த வகையில், பிரிட்டன் தலைநகர் லண்டன் மற்றும் ஆசிய நாடான சிங்கப்பூர் பங்கு சந்தைகளில், 2,672.80 கோடி ரூபாய்க்கு மசாலா பத்திரங்கள் வெளியிடப்பட்டன.
இதன் வாயிலாக, 2,150 கோடி ரூபாய் நிதி வசூலிக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து 466.91 கோடி ரூபாய்க்கு முறைகேடாக அரசு நிலம் வாங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளின் கீழ், வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த மோசடி தொடர்பாக விளக்கமளிக்க வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயன், 2018ல் நிதி அமைச்சராக இருந்த தாமஸ் ஐசக், முதல்வரின் தலைமை செயலர் ஆபிரகாம் ஆகியோருக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி பினராயி விஜயன், தாமஸ் ஐசக், ஆபிரகாம் ஆகியோர் கேரள உயர் நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி தன் உத்தரவில் கூறியதாவது:
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு வாரியம் அமைக்கப்பட்டது தொடர்பான வழக்கிற்கு, உயர் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது.
தடை
எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய பினராயி விஜயன் உள்ளிட்ட மூவருக்கும் இடைக்கால நிவாரணம் வழங்கப் படுகிறது. அதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு, இவர்கள் மூன்று பேர் மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்படுகிறது. மூவரும் சேர்ந்து தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க வேண்டும்.
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு வாரியம் அமைக்கப்பட்டது தொடர்பான விசாரணை, அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கும்போது அமலாக்க துறையின் பதில் குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டது.

