கெரேகோடு கிராமத்தில் கொடி கம்பம் அகற்றம்? மாண்டியா மாவட்ட நிர்வாகம் அவசர கூட்டம்
கெரேகோடு கிராமத்தில் கொடி கம்பம் அகற்றம்? மாண்டியா மாவட்ட நிர்வாகம் அவசர கூட்டம்
ADDED : பிப் 03, 2024 11:10 PM

மாண்டியா: மாண்டியா கெரேகோடு கிராமத்தில் ஹனுமன் கொடி ஏற்றிய கம்பத்தை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவியதால் பரபரப்பு நிலவியது. ஆனால் இதை மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.
மாண்டியா மாவட்டம், கெரேகோடு கிராமத்தில், கடந்த மாதம் 108 அடி உயர கொடி கம்பத்தில், ஹனுமன் உருவம் பொறிக்கப்பட்ட காவிக் கொடி பறக்கவிடப்பட்டது.
இதை மாவட்ட நிர்வாகம் அகற்ற முயற்சித்தபோது, கிராம மக்கள், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் போலீசார் தடியடி நடத்தினர். 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அக்கொடி கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
மாநிலம் முழுதும் பரவல்
இச்சம்பவம் மாநிலம் முழுதும் பரவ துவங்கியது. இதையடுத்து, கொடிக் கம்பத்தையே அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது.
இதனால் கோபமடைந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார், மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் செலுவராயசாமி ஆகியோர் செயல்பாட்டை கண்டித்தனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ., ஷேக் தன்வீர் ஆசிப் கூறுகையில், ''கொடிக் கம்பத்தை அகற்ற உத்தரவு வரவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் உண்மையல்ல,'' என தெளிவுபடுத்தினார்.
மாவட்ட எஸ்.பி., யதீஷ் கூறியதாவது:
கொடிக் கம்பம் விவகாரம் மிகவும் சென்சிட்டிவானது. இணையதளங்களில் வரும் செய்திகளை மாவட்ட நிர்வாகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சமூகத்தின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் வகையில், வீடியோக்கள், படங்கள், ஆத்திரமூட்டும் கருத்துகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைதி கூட்டம்
கெரேகோடு கிராமத்தில் மாவட்ட கலெக்டர் குமார், மாவட்ட எஸ்.பி., யதீஷ் ஆகியோர் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்துக்கு, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்தனர்.
மாவட்ட கலெக்டர் குமார் கூறுகையில், ''பேச்சு மூலம் விரைவில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது,'' என்றார்.
கொடிக் கம்பம் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார். இடம்: கெரேகோடு கிராமம், மாண்டியா.