நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: கட்சிகளுடன் அமைச்சர் ஆலோசனை
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: கட்சிகளுடன் அமைச்சர் ஆலோசனை
ADDED : ஜூன் 03, 2025 10:11 PM

புதுடில்லி: அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், அவரை பதவியில் இருந்து நீக்க தீர்மானத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அனைத்து கட்சிகளுடன் பேச வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பதவி வகிக்கும் யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் டில்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றினார். கடந்த மார்ச் 14ல், டில்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்ட போது, எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
சர்ச்சை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'இந்த பணத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறினார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார். இந்த குழுவினர் நடத்திய விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றம் நிரூபணமானது.
இதையடுத்து, நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும்படி, யஷ்வந்த் வர்மாவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால் முரண்டு பிடித்தார்.
அதிருப்தி அடைந்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, விசாரணை குழுவின் அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தார். இதனையடுத்து யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், பார்லிமென்டின் மழை கால கூட்டத்தொடருக்கு முன்னாள் யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்யாவிட்டால், அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மனம் கொண்டு வரப்படும். நீதித்துறையின் ஒருமைப்பாட்டையும், நீதி அமைப்பு மீது மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுத்து உள்ளது. பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.