ADDED : டிச 05, 2024 07:31 AM
பெங்களூரு: 'பல்லாரி மாவட்ட மருத்துவமனையில், தாய்மார்களின் இறப்புக்கு காரணமான, தரமற்ற ஐ.வி., குளுக்கோஸ் சப்ளை செய்த மேற்கு வங்க நிறுவனத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும்' என, கர்நாடக சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய மருந்து கட்டுப்பாட்டாளருக்கு, கர்நாடக சுகாதாரத் துறை தலைமை செயலர் ஹர்ஷா குப்தா எழுதிய கடிதம்:
கடந்த வாரம் பல்லாரி மாவட்ட மருத்துவமனையில், பிரசவத்துக்கு பின் நான்கு பெண்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து, விசாரணை நடத்தியபோது தரமற்ற ஐ.வி., குளுக்கோஸ் செலுத்தப்பட்டதே காரணம் என தெரியவந்தது.
இது பற்றி, மத்திய மருந்து கட்டுப்பாட்டாளருக்கு மாநில சுகாதாரத் துறை அறிக்கை அளித்துள்ளது. ஐ.வி., குளுக்கோஸ் சப்ளை செய்தது, அதன் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்துள்ளது. நான்கு பெண்களின் இறப்புக்கு காரணமான, மேற்கு வங்க நிறுவனத்தின் மீது, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.