ADDED : நவ 07, 2024 01:45 AM
ஸ்ரீநகர்,
ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் கடும் அமளிக்கு இடையே, சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கும் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
நம் அரசியலமைப்பு சட்டத்தின், 370-வது சட்டப்பிரிவு ஜம்மு- - காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை 2019-ல் மத்திய பா.ஜ., அரசு, ரத்து செய்தது.
ஜம்மு - காஷ்மீரில், 10 ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி - காங்., கூட்டணி வெற்றி பெற்றது. பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லா, முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் சட்டசபை நேற்று வழக்கம் போல் கூடியதும், சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கும் தீர்மானத்தை தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி தாக்கல் செய்தார்.
இந்த தீர்மானத்துக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் சுனில் சர்மா உட்பட அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் சுனில் சர்மா கூறுகையில், “இந்த தீர்மானத்தை பா.ஜ., முற்றிலும் நிராகரிக்கிறது. துணைநிலை கவர்னர் உரை மீதான விவாதம் எனக் கூறிவிட்டு, அலுவலில் இல்லாத ஒன்றை அரசு தீர்மானமாக கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தால் எந்த பயனுமில்லை,” என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் முழக்கமிட்டனர். பதிலுக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும் கோஷமிட்டனர்.
கடும் கூச்சல், குழப்பத்துக்கு இடையே, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர் அறிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டு தீர்மானத்தின் நகலை அவர்கள் கிழித்துஎறிந்தனர். தொடர் அமளி நிலவியதால், சபையை சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர் ஒத்தி வைத்தார்.