அக்., 22-ல் ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகை பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
அக்., 22-ல் ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகை பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
ADDED : அக் 07, 2025 06:06 AM

சபரிமலை : ஜனாதிபதி திரவுபதி முர்மு, வரும் 22ம் தேதி சபரிமலை வருவதையொட்டி, பக்தர்கள் தரிசனத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலை வருவதாக இருந்தது. பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானம் வருவார் என்றும் ஒரு நாள் சபரிமலையில் தங்கி இருப்பார் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், வருகை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், வரும் 22-ல் அவர் சபரிமலை வருவது உறுதி செய்யப் பட்டுள்ளது. அன்று டில்லியிலிருந்து கொச்சி வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப் டர் மூலம் நிலக்கல் வருகிறார்.
பின் அங்கிருந்து பம்பை வந்து, சன்னிதானத்துக்கு செல்கிறார். அதன்பின் அக்., 24 வரை கேரளாவில் தங்கி இருந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ஜனாதிபதியின் சபரிமலை வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் துவங்கிஉள்ளன. ஐப்பசி பூஜைகளுக்காக சபரிமலை நடை, அக்., 17- மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. அக்., 18 அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் துவங்கும்.
அன்று காலை அடுத்த மண்டல காலம் முதல் ஒரு ஆண்டுக்கான மேல்சாந்தி தேர்வு நடைபெறும். சபரிமலையில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது அக்., 17-க்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அனுமதிக்கப்பட்டு உள்ளது. அக்., 18 முதல் 22- வரை முன்பதிவு அனுமதிக்கப்படவில்லை.
இதுகுறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறுகையில், 'ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் வந்த பின், அவர்களுடன் ஆலோசித்து எத்தனை நாட்கள் பக்தர்கள் தரிச னத்தை நிறுத்த வேண்டும் என்பதை முடிவு செய்த பின், மீதமுள்ள நாட்களுக்கு ஆன்லைன் முன்பதிவு அனுமதிக்கப்படும்' என்றனர்.