ஊக்கம், நிலுவை தொகை கேட்டு ஓய்வு மின் ஊழியர்கள் போராட்டம்
ஊக்கம், நிலுவை தொகை கேட்டு ஓய்வு மின் ஊழியர்கள் போராட்டம்
ADDED : மார் 21, 2024 02:06 AM
மேட்டூர், மேட்டூர், 840 மெகாவாட் அனல்மின் நிலையத்தில், 25 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து ஓய்வு பெற்ற முகவர், பொருத்துனர் உள்பட, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஊக்கத்தொகை, நிலுவை, போனஸ் உள்ளிட்ட அரசு வழங்க வேண்டிய தொகைகளை அனல்மின் நிலைய அலுவலர்கள், கணக்குகளை பராமரிக்காமல் நிலுவை வைத்துள்ளனர்.
அத்தொகையை வழங்க கோரி நேற்று காலை, ஓய்வு பெற்ற ஊழியர்கள், மேட்டூர், தொட்டில்பட்டி அனல்மின் நிலைய நிர்வாக
அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணை தலைவர் இளங்கோ, கிளை தலைவர் சண்முகம் உள்பட ஏராளமான சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அனல்மின் நிலைய மேற்பார்வை பொறியாளர் விவேகானந்தன், செயற்பொறியாளர் ஜாபர்பாஷா, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சு நடத்தி ஏப்ரலுக்குள் நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதையேற்று, 2 மணி நேர போராட்டத்தை கைவிட்டு, ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.

