திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக ஓய்வு ஐ.ஏ.எஸ்., நியமனம்
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக ஓய்வு ஐ.ஏ.எஸ்., நியமனம்
ADDED : நவ 11, 2025 03:32 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களை நிர்வகிக்கும் திரு விதாங்கூர் தேவசம் போர்டின் தலைவராக, முன்னாள் தலைமைச் செயலரான கே.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த வாரியத்தின் தலைவர் பதவியில் இருப்பவர்கள் இரண்டு ஆண்டு களுக்கு ஒரு முறை மாற்றப்படுவது வழக்கம்.
தற்போது, தலைவராக உள்ள பி.எஸ்.பிரசாந்தின் பதவிக்காலம் நாளை மறுநாள் நிறைவடைகிறது. இந்நிலையில், புதிய தலைவராக கேரள மாநில முன்னாள் தலைமைச் செயலரும், ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான கே.ஜெயக்குமாரை கேரள அரசு நியமித்து உள்ளது.
இவர், அரசுப் பணியில் இருந்த போது, சபரிமலை கோவிலின் சிறப்பு கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.
பணி ஓய்வுக்கு பின், துஞ்சத் எழுத்தச்சன் மலையாள பல்கலையின் துணை வேந்தராக ஜெயக்குமார் பொறுப்பு வகித்துள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமானது தொடர்பான வழக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த கோவிலில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய ஒருவரையே திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக கேரள அரசு நியமித்துள்ளது.

