உடனே உங்க நாட்டுக்கு திரும்பி போங்க: அகதிகளாக வசிக்கும் ஆப்கன் நாட்டினருக்கு பாகிஸ்தான் உத்தரவு
உடனே உங்க நாட்டுக்கு திரும்பி போங்க: அகதிகளாக வசிக்கும் ஆப்கன் நாட்டினருக்கு பாகிஸ்தான் உத்தரவு
ADDED : அக் 18, 2025 01:16 PM

இஸ்லாமாபாத்: ''பாகிஸ்தானில் அகதிகளாக வசிக்கும் ஆப்கன் நாட்டினர் அனைவரும் தங்களது சொந்த நாட்டிற்கு உடனடியாக திரும்ப வேண்டும். எங்களின் நிலமும், வளமும் 25 கோடி பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமே சொந்தம்'' என பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்து உள்ளார்.
ஆப்கனில் உள்நாட்டு போர் வெடித்த போது ஏராளமான மக்கள் பாகிஸ்தானில் அகதிகளாக குடிபெயர்ந்தனர். இப்படி பல லட்சம் பேர் வந்து குவிந்ததால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளான பாகிஸ்தான் அரசு, அவர்களை திருப்பி அனுப்ப பல்வேறு வேலைகளை செய்கிறது. அந்த வகையில், ஆப்கனில் இரண்டாம் முறையாக தலிபான் ஆட்சி அமைந்த பிறகு, பலர் தாயகம் திரும்பியுள்ளனர்.
ஐநா அகதிகள் அமைப்பின் செப்டம்பர் மாதம் கணக்குப்படி 15 லட்சம் ஆப்கன் அகதிகள் தாயகம் திரும்பி இருக்கின்றனர். இன்னும் பாகிஸ்தானில் 23 லட்சம் பாகிஸ்தானில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.
அவர்களில் 13 லட்சம் பேர் அதிகாரபூர்வமாக அகதிகள் அடையாள அட்டை வைத்து இருக்கின்றனர். மீதமுள்ள 10 லட்சம் பேர் சட்டவிரோதமாக வசிக்கின்றனர்.
இதற்கிடையே, தற்போது பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடரும் மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது: ஆப்கானிஸ்தானுடன் அனைத்து உறவுகளும் முடிந்து விட்டது. பாகிஸ்தானில் அகதிகளாக வசிக்கும் ஆப்கன் நாட்டினர் அனைவரும் தங்களது சொந்த நாட்டிற்கு உடனடியாக திரும்ப வேண்டும்.
எங்களின் நிலமும், வளமும் 25 கோடி பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமே சொந்தம். எங்களின் பிரதிநிதிகளும் ஆப்கன் செல்ல மாட்டார்கள். பயங்கரவாதம் எங்கிருந்தாலும், அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு கவாஜா ஆசிப் தெரிவித்தார்.