வளர்ச்சி பணிகள் பூஜ்ஜியம் முதல்வர் மீது ரேவண்ணா புகார்
வளர்ச்சி பணிகள் பூஜ்ஜியம் முதல்வர் மீது ரேவண்ணா புகார்
ADDED : பிப் 26, 2024 07:24 AM

ஹாசன்: ''சில வாக்குறுதி திட்டங்களை தவிர, மற்ற அனைத்து வளர்ச்சி பணிகளும் பூஜ்ஜியமாக உள்ளன. ம.ஜ.த., செய்த வளர்ச்சி பணிகளை, முதல்வர் சித்தராமையா ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்,'' என ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா குற்றம்சாட்டினர்.
ஹாசன் நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளையும் அரசு மூடி உள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடா படித்த ஸ்ரீமதி எல்.வி.அர்ஸ் பாலிடெக்னிக் கல்லுாரியை, மாநிலம் மற்றும் நாட்டிலேயே முதல் இடத்துக்கு கொண்டு வர பாடுபடுவோம்.
ஹாசன் நகர் பாலிடெக்னிக் கல்லுாரியில் தற்போது 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். அரிசிகெரேவை சேர்ந்த வெங்கடசாமி குடும்பத்தினர், 40 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கி, ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு உதவினர்.
குமாரசாமி முதல்வராக இருந்த காலத்தில் பல கல்லுாரிகள் திறக்கப்பட்டன. நான், மின் துறை அமைச்சராக இருந்தபோது, ஹாசனுக்கு 500 கணினிகள் வழங்கப்பட்டன. குமாரசாமியின் ஆட்சியில் கல்விக்கு அதிக ஊக்கம் அளிக்கப்பட்டது.
தற்போதைய காங்கிரஸ் அரசு வெட்கப்பட வேண்டும். இன்னும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. சில வாக்குறுதி திட்டங்களை வழங்கி, மீதியை மேம்படுத்தவில்லை.
எங்கள் ஆட்சியில் இந்த மாவட்டத்தில் 20 கல்லுாரிகள் நிறுவப்பட்டன. மாநில அரசு தற்போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றாலும், என்னிடம் விசாரணைகளை நடத்தினர். மாநில அரசு நலம் கருதாவிட்டால், தற்போதுள்ள அனைத்து அரசு துவக்க பள்ளிகளையும் மூடும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

