ADDED : பிப் 01, 2024 06:51 AM

பெலகாவி: ''வருவாய் துறையின் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கவும், தவறான ஆவணங்கள் உருவாக்கப்படுவதை தடுக்கவும், ஒரு வாரத்தில், 'புசுரக் ஷா' திட்டம் துவக்கப்படும்' என வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வருவாய் துறையில் பழைய கையேடுகள் பாழடையும் நிலையை எட்டி உள்ளன. பதிவுகளை பெற முடியாமல், மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, அந்த ஆவணங்களை நிரந்தரமாக பாதுகாக்கவும், நகல் உருவாவதை தடுக்கவும், முதற்கட்டமாக, 31 மாவட்டங்களில் தலா ஒரு தாலுகாவில் 'பசுரக் ஷா' திட்டம் துவக்கப்படும்.
இதன் மூலம், வருவாய் துறையின் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கவும், தவறான ஆவணங்கள் உருவாக்கப்படுவதை தடுக்கவும் உதவும். 100 நாட்களில் அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
நில அளவை துறையில் பணிகளை விரைவு படுத்த பிப்ரவரியில் தாலுகா மையங்களில், 750 உரிம சர்வேயர்கள் நியமிக்கப்படுவர். 357 அரசு சர்வேயர்கள், உதவி சர்வேயர்கள் பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஆட்சேர்ப்பு செயல்முறை கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் மேற்கொள்ளப்படும். காலியாக உள்ள 592 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
மாநிலத்தில் உள்ள சர்வேயர்களுக்கு 30 கோடி ரூபாய் செலவில் உபகரணங்கள் வழங்கப்படும். இதனால் பணியாளர்கள் அதிகளவில் கணக்கெடுப்பு பணிகளை திட்டமிட்ட நேரத்தில் மேற்கொள்ள முடியும்.
வருவாய் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்கும் முன், பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது இந்த வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.