UPDATED : ஆக 20, 2024 11:51 PM
ADDED : ஆக 20, 2024 11:40 PM

தானே : எல்.கே.ஜி., படிக்கும் 4 வயது சிறுமியர் இருவரை துப்புரவு தொழிலாளி பாலியல் கொடுமை செய்த சம்பவத்தின் எதிரொலியாக, மஹாராஷ்டிராவின் தானே நகரில் கலவரம் வெடித்தது. பெற்றோர் மற்றும் பொது மக்கள் திரண்டு பள்ளியை அடித்து நொறுக்கினர். ரயில் மறியல், சாலை மறியல், கல்வீச்சு நடந்து பலர் காயம் அடைந்தனர்.
தானே அருகே பத்லாபூரில் உள்ள தனியார் பள்ளியின் மழலையர் வகுப்பில் படிக்கும் சிறுமி, தன்னையும் தன் தோழியையும் பள்ளி கழிப்பறையில் மடக்கி, தவறான முறையில் ஒருவர் தொட்டதாக தாத்தாவிடம் கடந்த 16ம் தேதி கூறினார்.
பயந்து அழுதனர்
அவர், சிறுமியின் பெற்றோரிடம் கூற, அவர்கள் மற்றொரு சிறுமியின் பெற்றோரிடம் விசாரித்தனர். அந்த சிறுமியின் பெற்றோர், தங்கள் மகள் சில நாட்களாக பள்ளி செல்ல பயந்து அழுவதாக கூறினர்.
இரண்டு சிறுமியரிடமும் விசாரித்த போது, கடந்த 12ம் தேதி பள்ளியின் துப்புரவு தொழிலாளி தங்களை கழிப்பறைக்கு அழைத்துச் சென்றதாக குழந்தைகள் கூறினர். இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர்.
ஒரு குழந்தையின் பிறப்புறுப்பில் காயம் இருப்பது உறுதியானது. மற்றொரு குழந்தையிடமும் அத்துமீறிய அடையாளம் தெரிந்தது.
பெற்றோர் அன்று மதியமே பள்ளிக்கு சென்று முறையிட்டனர். அவர்கள் பத்லாபூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மூன்று மணி நேரம் கழித்து பள்ளிக்கு வந்த போலீசார் சிறுமியரிடம் வாக்குமூலம் பெற்றனர். 'போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, குற்றவாளியை கைது செய்ய வேண்டும்' என பெற்றோர் கூறினர்.
இன்ஸ்பெக்டர் சுபதா ஷிட்டோலே, 'முதலில் சம்பவத்தை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்பே எப்.ஐ.ஆர்., போட முடியும்' என கூறிவிட்டு, துப்புரவு தொழிலாளி அக்ஷய் ஷிண்டேவை, 23, விசாரணைக்கு அழைத்துச் சென்றார்.
பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கேட்டனர். மழலையர் வகுப்புகள் உள்ள பகுதியின் கேமரா, சில நாட்களாக வேலை செய்யவில்லை என பள்ளி நிர்வாகம் கூறியது.
இதனால் நம்பிக்கை இழந்த பெற்றோர், தானே மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் புகார் கொடுத்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரியின் தலையீட்டால், 17ம் தேதி எப்.ஐ.ஆர்., பதிந்து அக் ஷயை போலீசார் கைது செய்தனர்.
மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு இந்த சம்பவம் குறித்து நேற்று தான் தகவல் தெரிந்தது. அவர்கள் ஆவேசத்துடன் பள்ளி முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சிலர் பள்ளிக்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கினர்.
களத்தில் குதித்தனர்
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பொதுமக்களும் களத்தில் குதித்தனர். பத்லாபூர் முழுதும் போராட்டம் பரவியது. கடைகள் அடைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் பத்லாபூர் ரயில் நிலையத்தையும், தேசிய நெடுஞ்சாலையையும் முற்றுகையிட்டனர்.
காலை 10:00 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. மும்பை - கர்ஜாட் இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் வேறு வழியாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டன.
போராட்டம் தீவிரமானதை அடுத்து, மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன், பத்லாபூர் ரயில் நிலையத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார்.
“குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விரைந்து முடிக்க ஐ.ஜி., தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது,” என அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கிரிஷ் மகாஜன் விவரித்தார்.
ஆனாலும், சமாதானம் அடையாத மக்கள், குற்றவாளியை உடனே துாக்கிலிட வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அவர் சென்ற சில நிமிடங்களில், கூட்டத்தினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
சட்டப்படி நடவடிக்கை!
கல்வி நிறுவனங்கள் தங்களிடம் படிக்கும் மாணவியர் மீது மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும். வேலைக்கு ஆட்களை எடுக்கும் முன், அவர்களின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இதில், அலட்சியமாக செயல்பட்டது தெரிந்தால் கல்வி நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது நடவடிக்கை பாயும். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து, விரைவில் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.-ஏக்நாத் ஷிண்டேமஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா

