வேட்புமனு தாக்கல் செய்த உடன் ஆர்.ஜே.டி., வேட்பாளர் கைது
வேட்புமனு தாக்கல் செய்த உடன் ஆர்.ஜே.டி., வேட்பாளர் கைது
ADDED : அக் 22, 2025 06:12 AM

சசாராம்: பீஹாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சசாராம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த சில நிமிடங்களில், ராஷ்ட்ரீய ஜனதா தள வேட்பாளர் சதேந்திர ஷா கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு, நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் சசாராம் தொகுதிக்கு நவ., 11ல் தேர்தல் நடக்கிறது.
இந்த தொகுதியில், எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி சார்பில் ராஷ்ட்ரீய ஜனதா தள வேட்பாளர் சதேந்திர ஷா போட்டியிடுகிறார். அவர் நேற்று முன்தினம் அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தன் வேட்புமனுவை தாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் சென்றார்.
அப்போது ஜார்க்கண்ட் மாநில போலீசார் ஜாமினில் வெளிவரமுடியாத வாரன்டுடன் அங்கு வந்து சசேந்திர ஷாவை கைது செய்தனர்.
ஜார்க்கண்டின் கார்வா மாவட்டத்தில், 2004ல் நடந்த வங்கிக் கொள்ளை வழக்கில் சதேந்திரா ஷாவுக்கு தொடர்பு இருப்பதால் அவரை கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சசாராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை சதேந்திரா ஷா தாக்கல் செய்த உடன், போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.
பீஹார் சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி சார்பில் தற்போது போட்டியிடுபவர்களில் வேட்புமனு தாக்கல் செய்த பின் கைது செய்யப்பட்ட மூன்றாவது வேட்பாளர் சதேந்திரா ஷா.
முன்னதாக இந்த கூட்டணியில் உள்ள சி.பி.ஐ., - எம்.எல்., கட்சியைச் சேர்ந்த போர் மற்றும் தரவ்லி தொகுதி வேட்பாளர்கள் ஜிதேந்திர பஸ்வான், சத்திய தியோ ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.