ADDED : ஜன 30, 2025 11:47 PM

நெலமங்களா; தாவரகெரே, பெங்களூரு, மாகடி ஆகிய நகரங்களை இணைக்கும், 3.29 கி.மீ., துாரமுள்ள சொண்டேகொப்பா சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற, 154 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
தாவரகெரே, பெங்களூரு, மாகடி ஆகிய மூன்று நகரங்களை, நெலமங்களாவில் உள்ள 'சொண்டேகொப்பா சாலை' இணைக்கிறது. இவ்வழியாக ஏராளமானோர் பெங்களூருக்கு செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் போது, இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, சொண்டேகொப்பா சாலையில் இருந்து நகராட்சி பகுதி வரையிலான, 3.29 கி.மீ., துாரமுள்ள இச்சாலை, 20 மீட்டர் அகலப்படுத்தப்படுகிறது.
இச்சாலையில் 30 - 40 ஆண்டுகள் நிழல் கொடுத்து வந்த மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. சாலை டிவைடர், நடைபாதை, இரு புறமும் மின் விளக்குகள் அமைக்கவும் திட்டமிடப்பட்ட உள்ளது.
பொதுப்பணி துறை உதவி செயல் அலுவலர் பொறியாளர் சோமசேகரப்பா கூறியதாவது:
தொடர்ந்து மரங்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் மரங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
ஒரு மரத்தை அகற்றுவதற்கு இழப்பீடாக, பத்து மரங்கள் வளர்க்க, தேவையான தொகையை, வனத்துறையிடம் செலுத்தி உள்ளோம். இதுவரை 154 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
தேவையான இடங்களில் தோட்டங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து துறைகளிலும் அனுமதி பெற்று, பணிகள் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், 'இச்சாலையில் நீதிமன்றங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லுாரிகள், தொழிற்சாலைகள் உள்ளன. இவ்வழியாக ஏராளமானோர் பெங்களூரு செல்கின்றனர்.
'சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நான்கு வழிச்சாலை அமைத்தால், அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் அழிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். சாலை அமைத்த பின், மரங்கள் நடலாமே' என்றனர்.

