ADDED : ஏப் 13, 2025 12:23 AM
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், பொம்மை துப்பாக்கியை பயன்படுத்தி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
மேற்குவங்க தலைநகர் கொல்கட்டாவில் உள்ள சர்வே பார்க் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தலிம் பாசு, 31. அஞ்சல் துறை ஊழியரான இவர், வீட்டுக்கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.
மேலும், அன்றாட செலவுகளுக்கும் பணம் இல்லாததால், கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்தார்.
வங்கியில் கொள்ளை அடிக்க திட்டமிட்ட தலிம் பாசு, பொம்மை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, தான் சேமிப்பு கணக்கு வைத்துள்ள பொதுத்துறை வங்கியின் கிளைக்கு, நேற்று சென்றார்.
துப்பாக்கியை காட்டி அங்கிருந்த ஊழியர்கள், பொதுமக்களை மிரட்டிய அவர், நகை, பணத்தைக் கொடுக்கும்படி வற்புறுத்தினார்.
அவர் வைத்திருப்பது, பொம்மை துப்பாக்கி என்பதை கண்டறிந்த வங்கி ஊழியர்கள், அவரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின்படி வந்த போலீசார், தலிம் பாசுவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

