சூதாட்ட கடனுக்காக கொள்ளை முயற்சி; மரம் அறுக்கும் இயந்திரத்தால் கொடூர கொலை
சூதாட்ட கடனுக்காக கொள்ளை முயற்சி; மரம் அறுக்கும் இயந்திரத்தால் கொடூர கொலை
ADDED : டிச 23, 2024 04:40 AM

மாண்டியா: 'ஆன்லைன்' விளையாட்டுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கொள்ளையடிக்க முடிவு செய்து, மாண்டியாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை மரம் அறுக்கும் இயந்திரத்தால் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
மாண்டியா மாவட்டம், பாண்டவபுராவில் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கியாத்தனஹள்ளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வந்த மர்ம நபர், விவசாயி ரமேஷ், 60, என்பவரின் வீட்டின் கதவை தட்டினார்.
ஆர்டர்
கதவை திறந்த ரமேஷின் மனைவி யசோதம்மாவிடம், 58, மர்ம நபர், 'மரம் அறுக்கும் இயந்திரம் ஆர்டர் கொடுத்துள்ளீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். அதற்குெயசோதம்மா, 'நாங்கள் எதுவும் ஆர்டர் செய்யவில்லை' என்றார்.
உடனே, கையில் இருந்த மரம் அறுக்கும் இயந்திரத்தை 'ஆன்' செய்து, யசோதம்மாவின் கழுத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில் இருந்த இயந்திரத்தால் வெட்டினார். இதனால் யசோதம்மாவின் கன்னத்தில் காயம் ஏற்பட்டு, ரத்தம் குபு குபு என வெளியேறி, மயக்கம் அடைந்தார்.
வீட்டிற்குள் சென்ற மர்ம நபர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி ரமேஷை, அதே இயந்திரத்தால் கழுத்தை அறுத்துக் கொன்றார்.
இதேவேளையில், மயக்கம் தெளிந்து யசோதம்மா எழுந்தார். தன் கணவரின் கழுத்தை இயந்திரத்தால் அறுப்பதை பார்த்த அவர், உடனே, வீட்டின் முன்கதவை வெளியே பூட்டினார்; அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.
உடைக்க முயற்சி
இதனால், திக்குமுக்காடிய மர்ம நபர், மரக்கதவை உடைக்க முயற்சித்தார். அதற்குள் அக்கம் பக்கத்தினரும், பால் வாங்க வெளியே சென்றிருந்த யசோதம்மாவின் மகனும் வந்தனர்.
காயமடைந்த யசோதம்மா உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து, ஸ்ரீரங்கபட்டணா ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கதவை திறந்து உள்ளே சென்ற அக்கம் பக்கத்தினர், மர்ம நபரை பிடித்து சரமாரியாக உதைத்தனர். காயமடைந்த அவரிடம், 'எதற்காக கொலை செய்தாய்?' என கேட்டனர்.
அதற்கு அவர், ''நான் கொலை செய்ய வரவில்லை. மைசூரில் மரம் அறுக்கும் இயந்திரம் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிகிறேன். இயந்திரத்தை விற்கவே வந்தேன்'' என்றார்.
'எதற்காக கொன்றாய்?' என்று மீண்டும் கேட்டபோது, ''என்னையும் கொன்று விடுங்கள்,'' என மீண்டும் மீண்டும் கூறினார்.
அதற்குள் அங்கு வந்த போலீசார், மர்ம நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் ஸ்ரீரங்கப்பட்டணாவை சேர்ந்த முகமது இப்ராகிம், 37, என்பது தெரியவந்தது. ஆன்லைன் மொபைல் விளையாட்டில் பணத்தை இழந்ததாகவும், இதற்காக வாங்கிய கடனை செலுத்த முடியாததால், திருட வந்ததாகவும் கூறியுள்ளார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.