ADDED : அக் 03, 2024 07:14 PM
கஞ்சவாலா: கார் ஷோரூமில் துப்பாக்கி சூடு நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை துப்பாக்கியால் சுட்டு, போலீசார் கைது செய்தனர்.
நரைனாவில் உள்ள பழைய கார்களை விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 27ம் தேதி மூன்று பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் நுழைந்தது.
சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்த கும்பல், ஷோரூம் உரிமையாளரிடம் 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியது. அவர் மறுத்ததால் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் விலை உயர்ந்த பல கார்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹிமான்ஷு பாவ் கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கஞ்சவாலா பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை போலீசார் அங்கு விரைந்தனர்.
மோட்டார் பைக்கில் குற்றவாளி தப்பிச் செல்ல முற்பட்டார். அவரை நிறுத்துமாறு போலீசார் எச்சரித்தனர்.
போலீசாரை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டார். போலீசார் பதிலடி கொடுத்தனர். காலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. கீழே விழுந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர், அர்மான் கான், 27, என்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர். காயம் அடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

