ராபர்ட் வாத்ராவின் நண்பர் பண்டாரி பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பு
ராபர்ட் வாத்ராவின் நண்பர் பண்டாரி பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பு
UPDATED : ஜூலை 05, 2025 10:59 PM
ADDED : ஜூலை 05, 2025 10:57 PM

புதுடில்லி, :  பிரிட்டனை சேர்ந்த ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியை, தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக டில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரி, காங்கிரசின் சோனியா, ராகுல், வாத்ரா ஆகியோருக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். 2015ல் இந்தியாவில் வசித்த அவர், வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.
ஆவணங்கள் பறிமுதல்
இதன்படி, அவர் தொடர்புடைய இடங்களில் வருமானத் துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, 2016ல் லண்டனுக்கு சஞ்சய் பண்டாரி தப்பிச் சென்றார்.
இந்த விவகாரத்தில், அவர் மீது, 2017 பிப்ரவரியில் சட்ட விரோதப் பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்தது.
இந்த வழக்கில் டில்லி நீதிமன்றத்தில், 2020ல் அமலாக்கத் துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
தொடர்ந்து, 2023ல் தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில், காங்., - எம்.பி., பிரியங்கா கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வாத்ராவுக்கு சொந்தமான லண்டனில் உள்ள வீட்டை, சஞ்சய் பண்டாரி வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும் இதை, ராபர்ட் வாத்ரா மறுத்தார்.
மனு தாக்கல்
இந்நிலையில், தப்பியோடிய ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, டில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை  விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று, சஞ்சய் பண்டாரியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது.

