மூணாறு, சபரிமலை உட்பட நான்கு இடங்களில் 'ரோப் வே'க்கு ஏற்பாடு
மூணாறு, சபரிமலை உட்பட நான்கு இடங்களில் 'ரோப் வே'க்கு ஏற்பாடு
ADDED : ஆக 15, 2025 11:24 PM
மூணாறு,:கேரளாவில் மூணாறு, சபரிமலை உட்பட நான்கு இடங்களில் 'ரோப் வே' அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இம்மாநிலத்தில் மூணாறு, சபரிமலை, அதிரப்பள்ளி, மலையாற்றூரில் மத்திய அரசின் பர்வத் மாலா திட்டத்தில் 'ரோப் வே' வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்பணிகளை தேசிய நெடுஞ்சாலை தளவாட மேலாண்மை லிமிடெட் மேற்கொள்கிறது. ஏற்கனவே நான்கு இடங்களிலும் 'ரோப் வே' அமைக்கும் வாய்ப்பு குறித்து ஆய்வு நடத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தேசிய நெடுஞ்சாலை தளவாட மேலாண்மை லிமிடெட் டெண்டர் கோரியது.
மாநிலத்தில் நான்கு இடங்களில் 'ரோப் வே' அமைக்கப்பட உள்ள நிலையில் மிகவும் நீளமான 'ரோப் வே' மூணாறில் அமைக்கப்படுகிறது.
மூணாறு- வட்டவடை இடையே 18.30 கி.மீ., தூரம் 'ரோப் வே' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சபரிமலையில் பம்பை - சன்னிதானம் இடையே 2.62 கி.மீ., அதிரப்பள்ளியில் டிக்கெட் கவுண்டர் முதல் நீர்வீழ்ச்சியின் எதிர்புறம் வரை 350 மீட்டர், மணப்பாட்டுசிரா - மலையாற்றூர் இடையே 1.63 கி.மீ., தூரம் 'ரோப் வே' அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாற்றம் எதுவும் தேவைப்பட்டால் டி.பி.ஆரில் உட்படுத்தப்படும்.
ரோப் வேக்கு கட்டுமான செலவுகள் அதிகரிக்கும் என்ற போதும் சாதாரண ரோடுகளுக்கு நிலம் கையகப்படுத்தும் செலவு, கட்டுமான பணிகள், பராமரிப்பு ஆகியவற்றின் செலவுகளை கணக்கிடும்போது 'ரோப் வே' அமைப்பது லாபம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவிர மலைப்பகுதிகளில் கடும் வளைவுகள் உட்பட ஆபத்தான ரோடுகளில் பயணிப்பதை தவிர்த்து 'ரோப் வே' மூலம் உயரத்தில் நேராக செல்லலாம். அதனால் பயண நேரம் குறைவதுடன் தூசி உட்பட மாசு பாட்டையும் தவிர்க்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.