ADDED : பிப் 04, 2025 03:31 AM

திருவனந்தபுரம்:   கேரள மாநிலம் கோட்டயம் அருகே ரோட்டோர கடையில் ஏற்பட்ட மோதலில் போலீஸ்காரரை மிதித்துக்கொன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
கோட்டயம் அருகே ஏற்றுமானூரை சேர்ந்தவர் ஷியாம் பிரசாத் 44. கோட்டயம் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர். நேற்று அதிகாலை 1:00 மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஏற்றுமானூர் மது பார் அருகில் உள்ள ரோட்டோர ஓட்டலில் சாப்பிட சென்றார். அங்கு பெரும்பாயிகாட்டை சேர்ந்த ஜிபின் ஜார்ஜ் 27, குடிபோதையில் ஓட்டலில் இருந்தவர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
போலீஸ்காரர் வந்த தைரியத்தில் ஓட்டல் உரிமையாளர் ஜிபின் ஜார்ஜிடம் அமைதியாக இருங்கள், இல்லாவிட்டால் அவர் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜிபின் ஜார்ஜ்  போலீஸ்காரர் ஷியாம்பிரசாத்தை கீழே தள்ளிவிட்டு நெஞ்சில் சரமாரியாக மிதித்தார். இதில் மயக்கம் அடைந்த ஷியாம் பிரசாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போலீசார் வந்து ஜிபின் ஜார்ஜை  விரட்டி பிடித்து கைது செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷியாம் பிரசாத் அங்கு இறந்தார். ஜிபின் ஜார்ஜ் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. போலீஸ்காரர் மிதித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

