'ரோடு ஷோ' நடத்திய ரவுடி கும்பல்: லாடம் கட்டி பாடம் நடத்திய போலீஸ்
'ரோடு ஷோ' நடத்திய ரவுடி கும்பல்: லாடம் கட்டி பாடம் நடத்திய போலீஸ்
ADDED : அக் 05, 2025 12:51 AM
மும்பை: ரவுடி கும்பல் தலைவன் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை பேரணி நடத்தி கொண்டாடிய கும்பலை போலீசார் அடித்து உதைத்ததுடன், அவர்களை கயிற்றால் கட்டி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் மஹாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல ரவுடி மகேஷ் சோனாவானே. கொலை குற்றத்திற்காக, 2020ல் கைது செய்யப்பட்டு, நாசிக்கில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த செப்., 20ல் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை கொண்டாட, அவரது கூட்டாளிகள் முடிவு செய்தனர். இந்நிலையில், விடுதலையான மகேஷை சிறை வாசலில் இருந்து வரவேற்ற அந்த கும்பல், வாகனத்தில் பேரணி யாக அழைத்துச் சென்றனர்.
அப்போது ரோட்டில் சென்ற வாகனங்களை, தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை காட்டி மிரட்டினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில், அத்துமீறலில் ஈடுபட்ட கைதி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு நாசிக் போலீசார் பாடம் கற்பிக்க முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் ரவுடி மகேஷையும், அவரது கூட்டாளிகளையும் கயிற்றால் கட்டி பேரணியாக அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர். இது தொடர் பான வீடியோவும் சமூகவலை தளத்தில் வைரலானது.
இது குறித்து நாசிக் நகர போலீசார் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'ரோடு ஷோ நடத்தியவர்களை சும்மா விடவில்லை. அவர்களுக்கு கடினமான முறையில் பாடம் கற்பித்துள்ளோம். இது மற்றவர்களுக்கு வலுவான செய்தியாக இருக்கும். குற்றவாளிகளை கொண்டாடாதீர்கள்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.