இந்தியாவின் சக்திகள் இரண்டு; ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம்: பிரதமர் மோடி
இந்தியாவின் சக்திகள் இரண்டு; ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம்: பிரதமர் மோடி
ADDED : ஜூலை 12, 2025 12:08 PM

புதுடில்லி: ''இந்தியா 2 சக்திகளை கொண்டுள்ளது. ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம் என உலகம் நம்புகிறது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில், 51 ஆயிரம் இளைஞர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நியமன ஆணையை இன்று (ஜூலை 12) வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர், பிரதமர் மோடி பேசியதாவது: உங்களுடைய இந்த புதிய பயணத்திற்கு உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொள்ள வேண்டும்.
உத்தரவாதம்
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பகுதியாக ரோஜ்கர் மேளா திட்டம் உள்ளது. தேசத்தை கட்டியெழுப்ப முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியா 2 சக்திகளை கொண்டுள்ளது. ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம் என உலகம் நம்புகிறது. இளைஞர்களின் இந்த திறன் மிகப்பெரிய மூலதனம். நாட்டின் எதிர்காலத்திற்கு பெரிய உத்தரவாதம்.
பயன் அளிக்கும்
நான் சமீபத்தில் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு நாடு திரும்பி உள்ளேன்.
மற்ற நாடுகளுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் நிச்சயமாக நமது இளைஞர்களுக்கு பயன் அளிக்கும். ரோஜ்கர் மேளா திட்டம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அவர்கள் பங்கு முக்கியமானதாக மாறுவதற்கும் நமது அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.