ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில் சேவை பிரதமர் மோடி இன்று துவக்கம்
ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில் சேவை பிரதமர் மோடி இன்று துவக்கம்
ADDED : மார் 05, 2024 11:06 PM

புதுடில்லி:டில்லி - -காஜியாபாத்- - மீரட் இடையிலான ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில் பாதையில், துஹா - மோடி நகர் வடக்கு வரையிலான 17 கி.மீ., துாரத்துக்கு இடையே நமோ ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
இதுகுறித்து, தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
டில்லி - காஜியாபாத் - மீரட் இடையிலான ஆர்.அர்.டி.எஸ்., ரயில் பாதையில், துஹா - வடக்கு மோடி நகர் இடையிலான 17 கி.மீ., துாரத்துக்கு நமோ ரயில் போக்குவரத்து துவங்கப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் இருந்து, வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இந்த நமோ ரயில் போக்குவரத்தை இன்று துவக்கி வைக்கிறார்.
அதேநேரத்தில், முராத்நகர் நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
டில்லி- - காஜியாபாத் - -மீரட் ஆர்.ஆர்.டி.எஸ்., வழித்தடத்தில் ஏற்கனவே 17 கி.மீ., துாரத்துக்கு ரயில் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று துவக்கப்படும் 17 கி.மீ.,யுடன் மொத்தம் 34 கி.மீ., துாரத்துக்கு இந்த விரைவு ரயில் போக்குவரத்து சேவையை மக்கள் பயன்படுத்தலாம்.
சாஹிபாபாத் முதல் மோடி நகர் வடக்கு வரையில் எட்டு நிலையங்களுக்கு இன்று முதல் விரைவு ரயில் சேவை கிடைக்கும்.
தலைநகர் டில்லியை உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகருடன் இணைக்கும் வகையில் 82 கி.மீ., துாரத்துக்கு ஆர்.ஆர்.டி.எஸ்., விரைவு ரயில் திட்டத்துக்கு 2019ம் ஆண்டு மார்ச் மாதம், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

