போலி வங்கி கணக்குகள் மூலம் ரூ.1,000 கோடி பரிவர்த்தனை
போலி வங்கி கணக்குகள் மூலம் ரூ.1,000 கோடி பரிவர்த்தனை
ADDED : ஜன 17, 2026 01:42 AM

புதுடில்லி: ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் உள்ள பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி கிளையில், கணக்குகளைத் திறக்க, பலர் போலி ஆவணங்கள் அளித்ததாக புகார் எழுந் தது. வங்கி அதிகாரிகளின் துணையுடன் இந்த மோசடி அரங்கேறி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த வங்கியின் கிளை தலைவராக இருந்த விகாஸ் வத்வா, போலி கணக்குகளை திறக்க உடந்தையாக இருந்ததை கண்டறிந்தனர்.
போலி நிறுவனங்களின் பெயரில் இந்த நடப்புக் கணக்குகள் திறக்கப்பட்டு, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை, பல்வேறு வங்கிகள் வழியாகவும் டிஜிட்டல் தளங்கள் மூலமாகவும் சட்டவிரோத பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வங்கி கணக்குகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிதி, சைபர் குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து கிடைத்த வருமானத்தை மடைமாற்றம் செய்ய, பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. போலி வங்கி கணக்கு களின் மூலம் மட்டும் 1,084 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வங்கியின் கிளைத் தலைவர் விகாஸ் வத்வா உட்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

