ADDED : ஜன 29, 2025 10:55 PM

உத்தரகன்னடா; கர்நாடகாவில் அனாதையாக நின்றிருந்த காரில் இருந்து, 1.14 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம், உத்தரகன்னடா, அங்கோலாவின், ராமனகுளி கிராமத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இதன் அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நேற்று முன்தினம் 'ஹூண்டாய் க்ரெட்டா' கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. காரின் அருகில் யாரும் இல்லை.
மணி கணக்கில் ஒரே இடத்தில் கார் நின்றிருந்ததை கவனித்த அப்பகுதியினர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசாரும் நேற்று முன்தினம் இரவு அங்கு வந்து காரை பார்வையிட்டனர். கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் மூன்று நம்பர் பிளேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து, காரை போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச் சென்று சோதனையிட்டனர். இதில், காரில் ரகசிய லாக்கர் கண்டுபிடிக்கப்பட்டது.
அதை திறந்து பார்த்த போது, கட்டு கட்டாக பணம் இருந்தது. எண்ணி பார்த்ததில், 1 கோடியே 14 லட்சத்து 99,500 ரூபாய் இருந்தது.
பணம் யாருடையது, எதற்காக காரில் வைத்து ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நிறுத்தினர்; குற்றவாளிகளின் செயலா, கருப்பு பணமா என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

