'கோகுலம் சிட் பண்ட்' உரிமையாளர் வீட்டில் ரூ.1.5 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல்
'கோகுலம் சிட் பண்ட்' உரிமையாளர் வீட்டில் ரூ.1.5 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல்
ADDED : ஏப் 06, 2025 12:01 AM

சென்னை: எம்புரான் படத் தயாரிப்பாளரான கோகுலம் கோபாலனின் வீடு மற்றும் அலுவலகத்தில், கணக்கில் வராத 1.5 கோடி ரூபாயை, அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம், கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. இப்படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள், எதிர்ப்புக்கு பின் நீக்கப்பட்டன.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோபாலனின், 'கோகுலம் சிட்ஸ் அண்டு பைனான்ஸ்' நிதி நிறுவனத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2 நாள் சோதனை
அதாவது, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அலுவலகம், நீலாங்கரையில் உள்ள வீடு, கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், கொச்சியில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இரண்டு நாள் சோதனை நேற்று முடிவடைந்தது. சோதனையில், கணக்கில் வராத 1.5 கோடி ரூபாயை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இது குறித்து, அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைகளை மீறி, கோகுலம் நிதி நிறுவனம், இந்தியாவுக்கு வெளியே பலரிடம் சீட்டு பணம் வசூலிப்பதாக தகவல் வந்தது.
அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், சென்னை மற்றும் கோழிக்கோடில், அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.
சீட்டுப்பணம்
சோதனையில், கோகுலம் நிதி நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே வசிப்பவர்களிடம் இருந்து விதிகளை மீறி, 371.80 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 220.74 கோடி ரூபாய் காசோலையாகவும் சீட்டு பணம் வசூலித்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், கணக்கில் வராத 1.5 கோடி ரூபாய் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.