மகளிருக்கு மாதம் ரூ.2,100 ஹரியானாவில் பா.ஜ., தாராளம்
மகளிருக்கு மாதம் ரூ.2,100 ஹரியானாவில் பா.ஜ., தாராளம்
ADDED : செப் 20, 2024 12:34 AM

சண்டிகர்: ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபையின் 90 தொகுதிகளுக்கு, அக்., 5ல் தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், கட்சியின் தேர்தல் அறிக்கையை ரோத்தக்கில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய தலைவர் நட்டா நேற்று வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கை
'மீண்டும் ஆட்சி அமைத்தால் அனைத்து பெண்களுக்கும் மாதம், 2,100 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும். இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்' என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
அறிக்கையை வெளியிட்டு நட்டா பேசியதாவது:
ஹரியானாவில், கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை மக்கள் கண்கூடாக பார்க்கின்றனர்.
ஊழல்களையே தங்களுடைய தேர்தல் அறிக்கையாக முன்பிருந்த கட்சிகள் வெளியிட்டன. ஊழல் இல்லாத மிகச் சிறந்த வளர்ச்சிக்கான அரசை நாங்கள் வழங்கியுள்ளோம்.
வாக்குறுதி
தேர்தல் அறிக்கை வெளியிடுவது என்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சம்பிரதாயமாக உள்ளது. ஆனால், ஒவ்வொரு வார்த்தையையும் செயல்படுத்துவதுதான் பா.ஜ.,வின் வழக்கம்.
அதனால் தான் இதை தேர்தல் அறிக்கை என்று கூறாமல், உறுதிமொழி பத்திரம் என்று கூறுகிறோம்.
'நான்ஸ்டாப் ஹரியானா' எனப்படும் ஹரியானாவுக்கு தொடர் வளர்ச்சி என்பதை வாக்குறுதியாக அளித்திருந்தோம். அதை நிறைவேற்றி வருகிறோம். முந்தைய ஆட்சியில் இருந்த லஞ்சம், ஊழலை காணாமல் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பா.ஜ., 2,100 ரூபாய் என அறிவித்துள்ளது.