ADDED : ஆக 13, 2025 01:11 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், இரண்டு கார்களில் கடத்திச் செல்லப்பட்ட, 32 கோடி ரூபாய் மதிப்பிலான, 'மெபெட்ரோன்' போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
'மியாவ் மியாவ்' அல்லது 'ஒயிட் மேஜிக்' என்று அழைக்கப்படும் போதைப்பொருளின் வேதியியல் பெயர் 'மெபெட்ரோன்'. பெரும்பாலும், பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் இந்த போதைப்பொருளால் மாரடைப்பு, நினைவு இழத்தல், வலிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.
'கோகைன்' போன்ற போதை பொருட்களுடன் ஒப்பிடுகையில், மலிவான விலையில் கிடைப்பதாலும், 'ஆன்லைன்' தளங்களில் எளிதாக வாங்க முடிவதாலும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ரஞ்சனோலி அருகே மெபெட்ரோன் போதைப்பொருள் டெலிவரி செய்யப்பட இருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, நாசிக் - -தானே நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற பி.எம்.டபிள்யு., உட்பட இரண்டு கார்களை மடக்கிபிடித்தனர்.
அதில் அன்சாரி என்பவரின் காரில் இருந்து சுமார் 11.7 கிலோவும், தேசாய் என்பவரின் பி.எம்.டபிள்யு., காரில் இருந்து 4.161 கிலோ என, 15 கிலோவுக்கு மேல் மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பி.எம்.டபிள்யு., காரை திருடி, அதில் தானே மாநகராட்சியின் லோகோவை வைத்து கடத்தலுக்கு பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும், ஏற்கனவே தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.