ADDED : டிச 06, 2025 02:13 AM
சபரிமலை: சபரிமலையில் இயற்கை மரணம் அடைபவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மூலம் ரூ.40 லட்சம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் கடந்த சில ஆண்டுகளாக விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விபத்துகளின் மரணம் அடையும் பக்தர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் நிவாரணத் தொகை வழங்கி வந்தது. ஆனால் இயற்கை மரணம் அடையும் பக்தர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத நிலை இருந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வசதியாக இந்த ஆண்டு முதல் ஆன்லைன் முன்பதிவு மூலம் ஒரு பக்தரிடம் இருந்து ஐந்து ரூபாய் சபரிமலை பக்தர் நிவாரண நிதியாக பெறப்பட்டது.
இதனை பக்தர் விருப்பம் இருந்தால் மட்டும் செலுத்தலாம். அதனை செலுத்தாதவர்கள் சபரிமலை பாதையில் மரணமடைந்தாலும் அவருக்கும் இந்த நிவாரணம் கிடைக்கும்.அந்த வகையில் இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவில் நேற்று வரை ரூ.40 லட்சம் வசூல் ஆகியுள்ளதாக கூறியுள்ளது.
நடப்பு மண்டல காலம் தொடங்கிய பின்னர் 12 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். சபரிமலை பாதைகளில் மரணம் அடையும் பக்தர்களுக்கு நிவாரணம் வழங்க அப்பகுதியில் உள்ள மருத்துவமனை வழங்கும் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஆன்லைன் முன்பதிவு டிக்கெட், போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். தேவசம்போர்டு ஆணையர் தலைமையிலான நான்கு பேர் கமிட்டி இதை பரிசீலித்து உதவித்தொகை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

