ADDED : செப் 20, 2024 05:50 AM
பெங்களூரு: பெங்களூரு நகரில் வசிக்கும் 59 வயது நபர் ஒருவர், பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். கடந்த 12ம் தேதி இவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.
'டிராய் எனும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையத்தில் இருந்து பேசுகிறேன். உங்கள் ஆதார் அட்டையை வைத்து, போலியாக வங்கிக்கணக்கு துவங்கி, சைபர் கிரைம் மோசடி நடக்கிறது. இதுபற்றி எங்களுக்கு புகார் வந்து உள்ளது. உங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இரவில் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம், உங்களை நீதிபதி முன் ஆஜர்படுத்துவோம்' என்று கூறினார்.
இதனால், 59 வயது நபர் பயந்து போனார். 'என்னை இந்த பிரச்னையில் இருந்து காப்பாற்றுங்கள்' என்று கதறினார். உடனே அந்த நபர் ஒரு லிங்க்கை அனுப்பினார். 'அந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள். அதில் உள்ள தகவல்களை நிரப்பினால் போதும்' என்றார்.
இதை நம்பிய 59 வயது நபரும், லிங்க்கை கிளிக் செய்தார். அடுத்த சில நிமிடங்களில், அவரது வங்கி கணக்குகளில் இருந்து 59 லட்சம் ரூபாய், வேறு வங்கி கணக்குகளுக்கு சென்றது. தன்னிடம் பேசிய நபரை, 59 வயது நபர் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். நேற்று முன்தினம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.