'சதுரங்க வேட்டை' திரைப்பட பாணியில் கேரளாவில் ரூ.600 கோடி மெகா மோசடி
'சதுரங்க வேட்டை' திரைப்பட பாணியில் கேரளாவில் ரூ.600 கோடி மெகா மோசடி
ADDED : பிப் 10, 2025 12:39 AM

மூணாறு : கேரளாவில், பொருட்களை பாதி விலைக்கு கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றி, சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில், 600 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை மூவாற்றுபுழா போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், இடுக்கி, தொடுபுழா அருகே கோளப்ரா, 7ம் மைல் பகுதியை சேர்ந்தவர் அனந்துகிருஷ்ணன், 27; விளை நிலங்களுக்கு உரம் வழங்கும் தொழில் செய்து வந்தார். பின், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்து வந்தவர், பாதி விலையில் ஸ்கூட்டர், லேப் டாப் உட்பட பல்வேறு பொருட்கள் வழங்குவதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதை நம்பி பணம் செலுத்தியவர்களுக்கு, ஆரம்பத்தில் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால் அம்மாநில மக்கள் பணம் செலுத்த வரிசையில் நின்றனர். இதைப்பார்த்த அனந்துகிருஷ்ணன், ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏஜன்ட்களை நியமித்து, வசூல் வேட்டையை துவக்கினார்.
நாளடையில் பொருட்கள் முறையாக வழங்கவில்லை. அதனால், எர்ணாகுளம் மாவட்டம், மூவாற்றுபுழா போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அனந்துகிருஷ்ணனின் மோசடி தெரியவந்தது. அவரை இரு வாரங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். மேல் விசாரணையில், அனந்துகிருஷ்ணன் கேரளா முழுதும், 600 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.
விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அனந்துகிருஷ்ணனை, நேற்று முன்தினம் சொந்த ஊர் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அவர் மோசடி செய்த பணத்தில், இடுக்கி மாவட்டத்தில் முட்டம், 7ம் மைல், குடையாத்துார் உட்பட பல பகுதிகளில் நிலங்கள் வாங்கியுள்ள விபரம் தெரியவந்தது.
நிலங்கள் உள்ள பகுதிக்கு அவரை போலீசார் அழைத்துச் சென்று நிலங்களின் மதிப்பு, அளவீடுகளை சேகரித்தனர். அனந்துகிருஷ்ணன், தமிழில் வெளியான, சதுரங்க வேட்டை திரைப்பட சினிமாவை மிஞ்சும் அளவில் மோசடி மன்னனாக மாறியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இடுக்கி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் அனந்துகிருஷ்ணன் மீது நேற்று வரை, 1,165 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பாக, 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமுளி, நெடுங்கண்டம் போலீஸ் ஸ்டேஷன்களில் அதிக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. மோசடியில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பதால், பலர் புகார் அளிக்க முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மோசடி பணத்தில் ஆளுங்கட்சி உட்பட அனைத்து கட்சியினருக்கும் கோடிக்கணக்கில் நிதி வழங்கியதாகவும், அந்த பட்டியலை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அனந்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளதால், அவரிடம் நிதி பெற்ற கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.