ரூ.6,691 கோடி வரவில்லை: ரூ.2000 நோட்டு கணக்கு சொல்கிறது ரிசர்வ் வங்கி
ரூ.6,691 கோடி வரவில்லை: ரூ.2000 நோட்டு கணக்கு சொல்கிறது ரிசர்வ் வங்கி
UPDATED : ஜன 01, 2025 10:16 PM
ADDED : ஜன 01, 2025 08:36 PM

புதுடில்லி: பொது மக்களிடம் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 98.12 சதவீத நோட்டுகள்  திரும்ப பெறப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதேநேரத்தில் ரூ.6,691 கோடி  மதிப்பிலான நோட்டுகள் மட்டும் திரும்ப வரவில்லை.
கடந்த 2023, மே 19ம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அக்., 07 வரை அனைத்து வங்கிக்கிளைகளிலும்,  இந்த  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அக்.,09 முதல்,  ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அவை திரும்ப பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து, தபால் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப வேண்டும் எனக்கூறியிருந்தது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிச.,31 நிலவரப்படி 98.12 சதவீத 2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.6,691 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே, அரசிற்கு வரவில்லை.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

