ADDED : நவ 01, 2025 10:00 PM
புதுடில்லி: இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில் ஊனமுற்றவருக்கு, 75.67 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லியை சேர்ந்த அனில், 25, கடந்த 2023ம் ஆண்டு அக்., 30ம் தேதி ஸ்கூட்டியில் தன் நண்பர்கள் கிருஷ்ணன் கோபால், கேதன் குமார் ஆகியோருடன் சென்றார்.
சரிதா விஹார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டியில் மோதியது. மூவரும் துாக்கி வீசப்பட்டனர். கோபால் அதே இடத்தில் உயிரிழந்தார். அனில் மற்றும் கேதன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
அனிலுக்கு வலது காலில் முழங்காலுக்கு கீழ் அறுவைச் சிகிச்சையில் அகற்றப்பட்டது. முகம் மற்றும் உடலிலும் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. அனில் 70 சதவீத உடல் ஊனமுற்றவர் என டாக்டர்கள் சான்றளித்தனர்.
விபத்தில் நிரந்தர ஊனம் அடைந்த அனில், இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய தீர்ப்பாயத் தலைவர் ஷெல்லி அரோரா, “விபத்தில் காயமடைந்த அனிலுக்கு வலது முழங்காலுக்குக் கீழே துண்டிக்கப்பட்டுள்ளது.
''இது அவரது முழு வாழ்க்கையையும் பாதித்துள்ளது. வயது மற்றும் காயங்களால் அவர் அனுபவிக்க வேண்டிய இழப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அனிலுக்கு, 75.67 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை 'நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனம், தீர்ப்பாயத்தில் டிபாசிட் செய்ய வேண்டும்,” என, உத்தரவிட்டார்.

